நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான திருமண வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அண்மையில், ‘காஃபி வித் கரண் 9’ நிகழ்ச்சியில் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து இருவரும் பகிர்ந்துகொண்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தின.
விஜய்யிடம் பலமுறை திருமணம் செய்துகொள்ளக் கேட்டதாக ராஷ்மிகா தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, விஜய்யின் அணுகுமுறை குறித்து சிலர் விமர்சித்தனர். மேலும், இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என்ற தகவலும் விவாகரத்து வதந்திகளுக்கு வழிவகுத்தது.
இதற்குப் பதிலளித்துள்ள ராஷ்மிகா, தங்களது பேட்டியில் கூறப்பட்ட கருத்துகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் தேவையற்ற விமர்சனங்களையும் அறிவுரைகளையும் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் குறித்து முடிவெடுக்க இருவருக்கும் கால அவகாசம் தேவைப்பட்டதாகவும், தனது உணர்வுகளுக்கு விஜய் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வாழ்க்கையின் கடினமான காலங்களில் தனக்கு ஆதரவாக இருந்தவர் விஜய்தான் என்றும், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் ஏற்பட்டபோதும் அவர் தனக்குத் துணையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்த ராஷ்மிகா, தங்களது வாழ்க்கை குறித்து மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணியம் என்ற பெயரில் மற்றவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளைத் தீர்மானிக்க முயல்வது சரியல்ல என்றும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்து வாழ உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தங்களது உறவைப் பற்றிய வதந்திகளுக்கும் தேவையற்ற விமர்சனங்களுக்கும் ராஷ்மிகா அளித்துள்ள இந்தப் பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
