HomeTop newsபயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்கவே புதிய சட்டங்கள் - அமைச்சர் நளிந்த

பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்கவே புதிய சட்டங்கள் – அமைச்சர் நளிந்த

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமான பிரதான நோக்கத்துடனேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்த சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தல​ைமுடி வளர்த்திருத்தல் அல்லது உடலில் பச்சைக் குத்தியிருத்தல் போன்ற விடயங்கள் சாதாரண குடிமக்களை இலக்கு வைத்து அல்லாமல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவே சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஆதரவளிப்போர், உதவி புரிவோர் மற்றும் நிதி அனுசரணை வழங்குவோருக்கு எதிராகக் கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் இந்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் எவரும் பயப்படத் தேவையில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

மேலும், நாட்டுக்கு இத்தகைய சட்டம் அவசியமானது எனக் குறிப்பிட்ட அமைச்சர், கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான அதிகாரங்களுடன் இந்தச் சட்டம் செயற்படும் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதே தமது வாக்குறுதியாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், அதனை ஒழித்துவிட்டு நாட்டைப் பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமே புதிய இரண்டு சட்டங்களும் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டங்கள் மனித உரிமைகளுக்குப் பொருத்தமற்றவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதற்கு ஏற்ப பாராளுமன்றம் செயற்படத் தயாராக உள்ளதாகவும், இவை இரண்டும் இல்லாவிட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையே  கொண்டுவர நேரிடும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular