HomeTop newsஷிரந்தி ராஜபக்ஷவின் நோய் நிலைமை அறிக்கை

ஷிரந்தி ராஜபக்ஷவின் நோய் நிலைமை அறிக்கை

சிரிலிய சவிய கணக்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரந்தி ராஜபக்ஷவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்தது.

அவரது நோய் நிலைமை குறித்து வைத்தியர்கள் வழங்கிய அறிக்கையை விசேட காரணியாகக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 10 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமான முறையில் சிரிலிய சவிய அமைப்பிற்கு வழங்கிய சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (16) மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, சிரந்தி ராஜபக்ஷவின் நோய் நிலைமை குறித்த மருத்துவ அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

அதனைப் பரிசீலித்த நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரின் முகப்புக் கடிதத்துடன் இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சந்தேகநபரான அவருக்கு “பைபாஸ்” (Bypass) அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதவான் திறந்த நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

பின்னர் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அந்த மருத்துவ அறிக்கையைப் பரிசீலிப்பதற்கு இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சிரந்தி ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா அங்கு கருத்துத் தெரிவிக்கையில், சந்தேகநபரின் இடது இதய தமனியில் 80 முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“ஐயா… இந்த மருத்துவ அறிக்கையில் சந்தேகநபரின் இடது இதய தமனியில் 80 முதல் 90 சதவீதம் அடைப்பு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அவரது தமனிகளில் கடுமையான நோய் நிலைமை இருப்பது இதன் மூலம் புலனாகிறது. எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது பொருத்தமற்றது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அவருக்கு உள்ள கடுமையான இதய நோய் நிலைமையை விசேட காரணியாகக் கருதி பிணை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

“ஐயா… அவரது இதய தமனி ஒன்றில் கல்சியம் படிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார். சிறைச்சாலையில் இல்லை. அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் அவரது நோய் நிலைமையை இந்த சந்தர்ப்பத்தில் விசேட காரணியாகக் கருத முடியாது. ஏனெனில் அவரை ஏற்றிச் செல்வது பொருத்தமற்றது என வைத்தியர்கள் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியென்றால் அவருக்குப் பிணை வழங்கினாலும் வீட்டிற்குச் செல்ல முடியாது. எனவே குறித்த விடயத்தை விசேட காரணியாகக் கருத முடியாது.” என்றார்.

“இந்தச் சந்தேகநபர் தொடர்பாக இரண்டு மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்திற்குப் கிடைத்துள்ளன. சந்தேகநபரின் தமனிகளில் இரத்த அடைப்பு காணப்படுவதாக மருத்துவக் குழு அதில் சுட்டிக்காட்டியுள்ளது. அது நீண்டகாலமாக நீடித்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதன் கீழ் பிணை வழங்குவதற்கு விசேட காரணங்களை முன்வைக்க வேண்டும். விசேட காரணங்கள் எவை என்பது சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அவை ஒவ்வொரு வழக்கினதும் உள்ளடக்கத்திற்கு ஏற்ப விசேட சூழ்நிலைகளாக உருவெடுக்கலாம் என மேல் நீதிமன்றத் தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் நோய் நிலைமையினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதனை விசேட காரணியாகக் கருதாமல் இருக்க முடியாது.” என்றார்.

இதற்கமைய, இந்தச் சந்தேகநபருக்கு இருக்கும் நோய் நிலைமைகளை விசேட காரணங்களாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், அதனடிப்படையில் அவரைப் பிணையில் விடுவிப்பதாகவும் நீதவான் அறிவித்தார்.

அதன்படி, சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular