தமது கடன்களை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய தனிநபர்கள் மற்றும் சிறு, நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் மீண்டும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு முன்மொழிவுகளையும் அவர் தனது கடிதத்தில் முன்வைத்துள்ளார்.
தற்போது தொழில்களை நடத்தி வருபவர்களுக்கும் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கும் தமது வணிகங்களை விரிவுபடுத்தவும் புதிய தொழில்களை ஆரம்பிக்கவும் வங்கிக் கடன்கள் அத்தியாவசியமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கடந்த காலங்களில் கடன் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு, பின்னர் அவற்றை முழுமையாகச் செலுத்தி முடித்தவர்களும் கடன் தகவல் பணியகத்தின் (CRIB) அறிக்கையின் காரணமாக மீண்டும் கடன்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
CRIB அமைப்பு எவரையும் நேரடியாகக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில்லை என்றாலும், கடந்தகாலக் கடன் திருப்பிச் செலுத்தல் தொடர்பான தகவல்கள் ஐந்து ஆண்டுகள் வரை அறிக்கையில் இடம்பெறுவதால், கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாற்றாக, மலேசியாவின் மத்திய கடன் தகவல் அமைப்பான CCRIS நடைமுறையை முன்மாதிரியாகக் கொள்ள முடியும் எனவும், அங்கு கடன் நிலை புதுப்பிக்கப்படுவதுடன் கடந்த 12 மாதங்களுக்கான திருப்பிச் செலுத்தல் வரலாறு முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2027 வரவு செலவுத் திட்டத்துக்கான ஐந்து முக்கிய முன்மொழிவுகள்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்குமாறு நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
CRIB அறிக்கையை விரைவாகப் புதுப்பித்தல்: கடன் முழுமையாகச் செலுத்தப்பட்ட ஐந்து வேலை நாட்களுக்குள் கடன் தகவல் அறிக்கையைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தல்.
கடன் நிலையைத் தெளிவாகக் குறிப்பிடுதல்: முழுமையாகச் செலுத்தப்பட்ட கடன்களை ‘முழுமையாகத் தீர்க்கப்பட்டது’ அல்லது ‘முடிக்கப்பட்டது’ என அறிக்கையில் தெளிவாகப் பதிவு செய்தல்.
தற்போதைய நிதிநிலைக்கு முன்னுரிமை: கடந்தகாலக் கடன் சிக்கல்களை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், கடன் கோருபவர்களின் தற்போதைய வருமானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வங்கிகளுக்கு வழங்குதல்.
கடன் தகவல் தக்கவைப்புக் காலத்தை மறுஆய்வு செய்தல்: சர்வதேசத் தரநிலைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் கடன் தகவல் அறிக்கைகளில் கடந்தகாலத் தகவல்களைத் தக்கவைக்கும் காலத்தை 2027ஆம் ஆண்டில் மறுபரிசீலனை செய்தல்.
இரண்டாவது வாய்ப்பு வணிகக் கடன் திட்டம்: தமது கடன் கடமைகளை முழுமையாக நிறைவேற்றிய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தொழில்களை ஆரம்பிக்கவும் விரிவுபடுத்தவும் உதவும் வகையில் விசேட கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.
கடந்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒருவர், பின்னர் அந்தக் கடனை முழுமையாகச் செலுத்தி முடித்ததும் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் தொழில்முனைவோருக்கு மட்டுமன்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு உடனடியானதும் நிரந்தரமானதுமான தீர்வொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.
