எதிர்காலத்தில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும் பட்சத்தில், அவற்றின் ஏகபோக ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்கில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் 37ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், சில குழுக்களால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களைக் கண்டு பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், தேவையற்ற வகையில் எரிபொருளைக் கொள்வனவு செய்து சேமிப்பதைத் தவிர்க்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இடமளிக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
