சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் துறைமுக நகரமான யான்புவில் உள்ள முக்கியமான இடங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக ஏமனின் ஹவுதி அமைப்பினர் அறிவித்துள்ளனர். ரியாத் நகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்த சில மணிநேரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“தலைநகர் சனாவை தாக்க சவுதி படையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏமன் ஆயுத படைகள் பெருமளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி இரண்டு வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை நடத்தியுள்ளன,” என்று ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ டெலிகிராம் வாயிலாக தெரிவித்தார். முதலாவது தாக்குதல் ரியாத்திலும், இரண்டாவது தாக்குதல் யான்புவில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்தும் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் எரிபொருள் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அணைத்தனர். இத்தாக்குதல் காரணமாக விமான நிலைய போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் இயல்பு நிலை திரும்பியதாகவும் ‘FlightRadar24’ கண்காணிப்பு தளம் தெரிவித்துள்ளது.
ஏமனில் இந்த மாதத்தில் சண்டை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சவுதி அதிகாரிகள் இரவில் முதன்முறையாக வான்வழி தாக்குதல் எச்சரிக்கையை விடுத்திருந்தனர். அதற்கு அடுத்தபடியாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது. தற்போது ஹவுதிக்களின் வேகமான நகர்வுகளால் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கம் அவர்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
