ஈரானின் எண்ணெய் கப்பல் ஒன்றை இலக்கு வைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றையே இந்தத் தாக்குதல் இலக்கு வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பில் ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.
கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற காணொளியொன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். இதேவேளை, கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்ட கடற்படை முற்றுகையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் இடம்பெறும் கார்க் தீவைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த தாக்குதல் ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய்த் தொழில்துறைக்கு மேலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
