எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்ட காலம் தடுத்து வைப்பது என்பன காரணமாக, அந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து அதனை விரைவாக இரத்து செய்து புதிய சட்டமொன்றை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் அந்த அறிக்கையின் ஊடாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற பாரிய மாற்றங்களைச் செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்தியமையினால் தன்னிச்சையான கைதுகளும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்ட காலம் தடுத்து வைப்பதும் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் அவ்வாறு காவலின் போதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதோ இடம்பெற்ற 18 மரணங்களும், 2026 ஏப்ரல் மாதமாகும் போது அத்தகைய 3 சம்பவங்களும், அதேபோன்று 2025 ஆம் ஆண்டில் சித்திரவதை மற்றும் கொடூரமாக தாக்குதல் நடாத்துதல் தொடர்பான 602 சம்பவங்களும், 2026 ஏப்ரல் மாதமாகும் போது அத்தகைய 138 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சில வழக்குகளில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை நிலையான பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளடங்கலாக இராணுவ மற்றும் சிவிலியன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மட்டத்திலான உளவு பார்த்தல், அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்குதல்கள் இடம்பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து அதனை விரைவாக இரத்து செய்து புதிய சட்டமொன்றை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் பரிந்துரை செய்கிறது.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்தல், மேலதிக காணி சுவீகரிப்புகளை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்தல் ஆகியனவும் இந்த அறிக்கையின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம், ICCPR சட்டம் மற்றும் வரைவு செய்யப்பட்டுள்ள NGO சட்டத்தைச் திருத்துதல் அல்லது இரத்து செய்தலும் பரிந்துரைகளில் அடங்கும்.
சிறைச்சாலைகளில் அதிக நெரிசல் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையிலடைக்காது சுகாதார ரீதியிலான மறுவாழ்விற்கு உட்படுத்துமாறும் ஜெனிவா உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
