Homeஉலகம்இம்ரான் கானை குடும்பத்தினர் சந்திக்க அனுமதி - இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

இம்ரான் கானை குடும்பத்தினர் சந்திக்க அனுமதி – இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். அவரது மனைவி புஷ்ரா பிபியும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இருவரும் ஒரே சிறைச்சாலை வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், தனித்தனியாக வைக்கப்பட்டதுடன், அவர்களை குடும்பத்தினர் சந்திப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இம்ரான் கான் தனது மனைவியைச் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், குறிப்பாக அவரது கண்பார்வை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் மற்றும் புஷ்ரா பிபியின் மகள் முபாஷரா கவார் மனேகா ஆகியோர், சிறையில் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தலுக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் பின்னர் தீர்ப்பளித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய இம்ரான் கானின் குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இம்ரான் கான் தனது மகனுடன் தொலைபேசி மூலம் உரையாடுவதற்கு சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவர் வாசிப்பதற்காக செய்தித்தாள்கள் மற்றும் தினசரி புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய இம்ரான் கானுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular