ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் வரைபடங்களை பயன்படுத்தி பரஸ்பரம் பதிலடி கொடுத்துள்ளன.
மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பயணிக்கும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனுடன், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் ஒரு பிராந்தியப் பகுதியாக சித்தரிக்கும் வரைபடம் ஒன்றையும் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவை அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கும் மறுபதிவு செய்திருந்தது.
இதற்கு பதிலடி வழங்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான கலிபோர்னியாவை ஈரானின் பிராந்தியப் பகுதியாக சித்தரிக்கும் வரைபடத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இந்த வரைபடம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் கலிபோர்னியா மாநிலம் நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டு, அதனை “இஸ்லாமிய குடியரசான ஈரானின் புதிய பிராந்தியப் பகுதி” என சித்தரிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் அதிகளவான ஈரானிய புலம்பெயர்ந்தோர் வசிக்கும் பகுதிகளில் கலிபோர்னியாவும் ஒன்றாகும். குறிப்பாக, லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் சுமார் 1,41,000 ஈரானிய வம்சாவளி அமெரிக்கர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள வெஸ்ட்வுட் பகுதி, அங்கு கணிசமான அளவில் ஈரானியர்கள் வசிப்பதால் “தெஹ்ராங்கலெஸ்” (Tehrangeles) என அழைக்கப்படுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானின் பெயரை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பெயர் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.
1979ஆம் ஆண்டு ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஈரானியர்களின் முக்கிய குடியேற்ற மையங்களில் ஒன்றாக லாஸ் ஏஞ்சலஸ் பகுதி மாறியமை குறிப்பிடத்தக்கது.
