Homeஉலகம்கிழக்கு எகிப்தில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிழக்கு எகிப்தில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிழக்கு எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதிக்கு வடக்கே 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததுடன், அதன் அதிர்வுகள் அண்டை நாடான இஸ்ரேல் வரை உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எகிப்தின் வானியல் மற்றும் புவி இயற்பியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, சூயஸ் நகருக்கு வடக்கே சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில், பூமிக்கு அடியில் 8 முதல் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

இதனையடுத்து, வடக்கு கெய்ரோவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து மூன்று குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும், சூயஸ் பகுதியில் வீடொன்றின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஒருவர் சிறு காயமடைந்துள்ளார்.

எனினும், இதுவரை பாரிய உயிர்ச்சேதம் அல்லது பெரியளவிலான கட்டமைப்பு சேதங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் கெய்ரோ, சினாய் தீபகற்பம் மற்றும் காசா எல்லைப் பகுதியான எல்-அரிஷ் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. அதேவேளை, இஸ்ரேலின் பீர்ஷெபா, ஜெருசலேம் நகரின் சில பகுதிகள், ஜோர்டான் மற்றும் லெபனான் பகுதிகளிலும் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எகிப்திய சுகாதார அமைச்சர் காலித் அப்தெல் கஃபார், நாடு முழுவதும் அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், ஆம்புலன்ஸ் சேவைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், பழைய மற்றும் பலவீனமான கட்டிடங்களை விட்டு விலகி பாதுகாப்பாக இருக்குமாறும் எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, நிலநடுக்கத்தின் போது இஸ்ரேல் மக்களின் சில கையடக்கத் தொலைபேசிகளுக்கு நிலநடுக்க எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கை இஸ்ரேல் இராணுவத்தின் ‘ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட்’ அமைப்பினால் அனுப்பப்படவில்லை எனவும், கூகுளின் ‘ஆண்ட்ராய்டு’ தானியங்கி நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பினால் அனுப்பப்பட்டதாகவும் இஸ்ரேல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவான அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கூகுள் அமைப்பு நிலநடுக்க எச்சரிக்கையை அனுப்பியதாகவும், இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ ‘த்ரூஆ’ எச்சரிக்கை அமைப்பு இந்த நிலநடுக்கத்தை கண்டறிந்த போதிலும், அது எல்லைக்கு அப்பால் ஏற்பட்ட குறைந்த தாக்கம் கொண்ட நிலநடுக்கம் என்பதால் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular