HomeTop newsஎல் நினோ காலநிலையை எதிர்கொள்ள உணவுப் பாதுகாப்பு, நீர் மற்றும் எரிசக்தி முகாமைத்துவத்தில் கவனம் அவசியம்...

எல் நினோ காலநிலையை எதிர்கொள்ள உணவுப் பாதுகாப்பு, நீர் மற்றும் எரிசக்தி முகாமைத்துவத்தில் கவனம் அவசியம் – பிரதமர்

எல் நினோ காலநிலையை எதிர்கொள்ள உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு நிலையங்கள், தொழிற்பயிற்சித் திட்டங்கள் மற்றும் முதியோர் சார்ந்த சமூகச் செயல்பாடுகள் போன்ற சேவைகளை மேம்படுத்த வேண்டும்

எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடும் என வானிலை அறிக்கைகள் எதிர்வுகூறியிருக்கின்ற ‘எல் நினோ’ காலநிலையை எதிர்கொள்வதற்கு, உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தில் ஜூன்16 நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பகிரப்பட்ட வரவுசெலவுத் திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள், அனர்த்தங்களைக் குறைப்பதற்கான திட்டங்கள், ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டம், துறைசார் அமைச்சுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் உள்ளிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இச்சந்தர்ப்பத்தின்போது ஆராயப்பட்டது.

விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்துக் கவனம் செலுத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கம்லத், கொழும்பு மாவட்டத்திற்கான விளையாட்டு உபகுழுவொன்று இதன்போது நியமிக்கப்பட்டதாகவும், இந்த உபகுழு ஊடாக எதிர்காலச் செயல்பாடுகள் திட்டமிடப்படும் என்றும் குறிப்பிட்டார். கிராமப்புறப் பாடசாலைகளின் விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தினால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நேரடி பாதிப்புகள் மற்றும் உலகளாவிய தாக்கங்களுக்குத் தயாராக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம், வலுசக்தி முகாமைத்துவம் மற்றும் வலுசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர், பகல் நேர பராமரிப்பு நிலையங்கள், தொழிற்பயிற்சித் திட்டங்கள் மற்றும் முதியோர் சார்ந்த சமூகச் செயல்பாடுகள் போன்ற சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular