HomeTop newsஉள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்கள் பேக்கரித் துறைக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் - பிரதமர்

உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்கள் பேக்கரித் துறைக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் – பிரதமர்

பேக்கரித் தயாரிப்புகளில் உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளை வலுப்படுத்துவதோடு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்று (12) கொழும்பில் அமைந்துள்ள ஷாங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

நாடு பொருளாதார ரீதியாக புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் நிலையில், பேக்கரித் தொழில்துறையை வெறும் மாவு சார்ந்த உற்பத்திகளுக்கு மட்டுப்படுத்தாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய துறையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உணவு உற்பத்தியில் தரம் மற்றும் ஆரோக்கியம் என்பன முன்னுரிமை பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் அற்ற, அதிக சத்துமிக்க ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

அரிசி மா, குரக்கன், தினை, பயறு வகைகள் மற்றும் உள்நாட்டு கிழங்கு வகைகள் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், உலகளவில் அதிகரித்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கங்களுக்கேற்ப பேக்கரித் துறை புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான உணவுத் தயாரிப்புகளில் உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு சுற்றுலாத்துறையின் போட்டித்திறனையும் மேம்படுத்தும் என தெரிவித்தார்.

உள்ளூர் வர்த்தகர்களை வலுப்படுத்த அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும், மூலப்பொருள் இறக்குமதி சவால்களைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களுக்கான சலுகைக் கடன் வசதிகளை வழங்குதல் மற்றும் சர்வதேச தரநிலைகளை அடைய தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தொழில் அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular