கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ‘விசேட டெங்கு ஒழிப்பு வாரம்’ ஒன்றை முன்னெடுக்க கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜூன் 12 ஆம் திகதி கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவல்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் சுமார் 39,100 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் 25.8 சதவீதம் பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு மாவட்டம் ‘அதி அபாய மாவட்டமாக’ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸின் தன்மை, அதற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் அண்மைய கடும் மழையுடனான வானிலை நிலைமைகள் டெங்கு பரவலை அதிகரித்துள்ளன என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வீடுகளை விட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலேயே டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படுவதாகவும், அகற்றப்படாத திண்மக் கழிவுகள் மற்றும் பராமரிப்பற்ற வடிகால் அமைப்புகள் நுளம்புகள் பெருகுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேவேளை, அதிக அபாய வலயங்களில் வீடுகள் பரிசோதிக்கப்படுவதுடன், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், பதாதைகள் காட்சிப்படுத்தல் மற்றும் ஊடகங்கள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாடசாலை வளாகங்களைச் சுத்தப்படுத்தும் பணிகளில் தரம் 10 இற்குக் கீழ் உள்ள மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியதுடன், மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கு அரசியல் தலைமைத்துவம், மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
