ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை ஜூன் 12 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து, ஆதிவாசி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
சந்திப்பின் போது, ஆதிவாசி மக்கள் தங்களின் பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து வன்னிலா எத்தோ பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர், ஆதிவாசி மக்களுக்கு தங்களது பாரம்பரிய காணிகளை எந்தத் தடையும் இன்றி பயன்படுத்தும் உரிமை இருப்பதாக வலியுறுத்தியதுடன், அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவாக நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல கிராம மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை என ஆதிவாசித் தலைவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, பிரதமர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் விரைவாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அத்துடன், தம்பானை பாடசாலையில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகள் தொடர்பாகவும் இருதரப்பினரும் கலந்துரையாடினர். குறித்த பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, பொருத்தமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு, ஆதிவாசி மக்களின் காணி உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
