HomeTop newsஎல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள முன்கூட்டிய திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை

எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

எதிர்பார்க்கப்படும் எல்-நினோ நிலைமையால் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் வலுசக்தித் துறைகளில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றை சமாளிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தற்போதுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்வளத்தை விவசாயம், குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவைகளுக்கேற்ப திறம்பட முகாமைத்துவம் செய்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்த முறை உருவாகக்கூடிய எல்-நினோ நிலைமை, 2016–2017 காலப்பகுதியில் பதிவான நிலைமையை ஒத்திருக்கக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், அதனை முன்னிட்டு விசேட நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக விவசாய நடவடிக்கைகளை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

எதிர்வரும் மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகம், விவசாய உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் குடிநீர் வழங்கலை உறுதிப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை விரைவாக தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும், கடந்த காலத்தில் பல்வேறு வெளிப்புற சவால்களை வெற்றிகரமாக சமாளித்ததைப் போலவே, எல்-நினோவால் ஏற்படக்கூடிய சவால்களையும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular