பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் அவற்றை நீக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய வழிமுறைகள் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் விசேட குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.
குறித்த விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போதே தேர்தல் ஆணைக்குழு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திர, சட்டத்தரணி சுனில் வடகல, முனீர் முலாபர் ஆகியோரும், குழு உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுண ஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும், ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் இணையவழியாகவும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
