பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அர்லேகர் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்வில் தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யுடன் மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சி அமைக்கும் உரிமையை கோரி விஜய் இன்று மாலை 6.30 மணியளவில் தமிழக ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அந்த சந்திப்பில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்கிய கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநர் கேரளா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டு விஜய்யுடன் சந்திப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கிய நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தது. அதேபோல், முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவுடன் கூட்டணியின் மொத்த ஆசன எண்ணிக்கை 120 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்த விஜய் தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளார்.
