Homeஉள்நாடுகாணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

காணி பிரச்சினைக்கு உரிய தீர்வு: இளங்குமரன் எம்.பி. உறுதி!

“வடக்கு,கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி , காணி உரிமையாளர்கள் மயிலிட்டி இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1990 ஆம் ஆண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில் இராணுவம் காணிகளை கையகப்படுத்தியது எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சென்று, மக்களுடன் கலந்துரையாடினார்.

மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்கள் கூறிய விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்குரிய காணிகள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் நாம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம்.

மக்களுக்கு ஒப்படைக்கப்படும் காணிகளை உரிய வகையில், உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினை நிரந்தரமாக தீரும். உங்கள் வசம் ஆவணங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்குரிய மண் உங்களுக்கே சொந்தமாகும்.

எமது ஆட்சி மக்களுக்கானது, எனவே, மக்களின் சொத்துகளை பலவந்தமாக வைத்துக்கொள்வதற்குரிய எண்ணம் எதுவும் இல்லை.

தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியம் அற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு எமது அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நிச்சயம் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular