Homeஉள்நாடு2.5 மில்லியன் டொலர்கள் ஹேக்கர்களுக்கு பூஜை: சஜித் குற்றச்சாட்டு!

2.5 மில்லியன் டொலர்கள் ஹேக்கர்களுக்கு பூஜை: சஜித் குற்றச்சாட்டு!

” நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு மத்திய வங்கியிடமே முன்னர் காணப்பட்டு வந்தது. பின்னர் மேற்கொண்ட புதிய ஒழுங்குமுறைகள் சட்ட விதிகளுக்கு ஏற்ப பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் வெளிநாட்டு மூலவளத் திணைக்களம் என்பற்றிடம் பொறுப்பளிக்கப்பட்டன.

இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் போது வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் செயன்முறைகளில் போதுமான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பதை அறிய வேண்டியது அவசியமாக காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் தொகை காணாமல் போனமை இந்தப் பிரச்சினையை மிக ஆபத்தாக எடுத்துக்காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின், மக்களின் மற்றும் அரசின் வரிப் பணமான 2.5 மில்லியன் டொலரை ஒரு ஹேக்கர் மோசடியாக கையகப்படுத்தியது நாட்டின் நிதி பாதுகாப்பு தொடர்பாக மிக ஆபத்தான பிரச்சினைகளை எம்மத்தியில் எழுப்புகிறது. இந்த சம்பவம் ஜனவரி மாதம் நடந்துள்ளது.

பின்னர் மார்ச் மாதம் இதற்கான விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டது. இந்த விடயங்கள் நேற்று முன்தினம் பொது வெளியில் வெளிவரும் வரை தற்போதைய அரசும், நிதி அமைச்சும் இந்த நிதி இழப்பை இரகசியமாக வைத்துக் கொண்டிருந்தது ஏன் என்ற கேள்வி இங்கு எழுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிதி இழப்பு நிகழ்ந்த பின்னர் விசாரணைக்கு நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் சுயாதீனம், வேலைத்திட்டத்தின் செயல்முறை ஒழுங்குகள் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதே நிறுவனத்தின் ஊழியர்களையே இந்த விசாரணைக்கு நியமிப்பது பொருத்தமான விடயமல்ல. இந்தளவு பாரதூரமான

சைபர் பாதுகாப்பு சிக்கலும், 2.5 மில்லியன் டொலர் இழப்பும் 4-5 மாதங்களாக மறைக்கப்பட்டு வந்து பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படாமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. நாட்டின் நிதி விடயங்களுக்கான முழுப் பொறுப்பும் பாராளுமன்றத்திற்கே காணப்படுகின்றன. இந்த பாரதூரமான மோசடி சம்பவம் இரகசியமாக வைக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2.5 மில்லியன் டொலர் இழப்புக்கு முக்கியப் பொறுப்பான பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் விசாரணையை முன்னெடுத்திருக்கும் அதே நேரத்தில், குறித்த நிறுவனம் பொதுநலவாய கடன் முகாமைத்துவ விருதையும் பெற்றிருக்கின்றது.

விருது பெற்ற நிறுவனம் ஒரு ஹேக்கரின் கணக்கிற்கு இவ்வளவு பெரிய தொகையை மாற்றியது தொடர்பாக விசாரணை நடப்பதும் ஒருபுறம் வியப்பளிக்கிறது. இரண்டு அரசுகளுக்கு இடையிலான பரிவர்த்தனையில் இவ்வாறு மிகப் பெரிய நிதி இழப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விரிவாக ஆராய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வங்கிக் கட்டமைப்பு வழியாக நிதி பரிமாற்றங்கள் நடைபெறும்போது பின்பற்றப்படும் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைமைகள் அமைந்து காணப்படுகின்றன. Registered white listed email, email indemnities, call of verification போன்ற பல நிரல்கள் இதில் பின்பற்றப்படுகின்றன.

வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறும்போது இணையப் பாதுகாப்பை உறுதி செய்யும் பல வழிமுறைமைகள் இருந்தும், அவற்றை செயல்படுத்த நிதி அமைச்சும் பொறுப்பான நிறுவனங்களும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பிரச்சினை காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தப் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மத்திய வங்கி பல தடவை பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு கடன் பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து எச்சரிக்கைகள் விடுத்தும், சரியான பாதுகாப்பு நடைமுறைகளை ஏன் பின்பற்றவில்லை என்று கேட்கிறோம்.

இது தொடர்பாக சுயாதீன மற்றும் வெளிப்படையான விசாரணையை முன்னெடுப்பது அவசியமாகும். இதை பாராளுமன்றத்திலிருந்து ஏன் மறைத்தீர்கள் என்ற விடயம் தொடர்பிலும் நாம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இன்று சமூகத்தில் இணையப் பாதுகாப்பு தொடர்பில் பேசப்படுகின்றன. அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிக்கட்டமைப்பில் சைபர் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும்போது இந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் ஏன் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி இங்கு எழுகிறது. ஸ்மார்ட் அரசாங்கத்தை உருவாக்குவோம், நாட்டை டிஜிட்டல் மயமாக்குவோம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை நோக்கிச் செல்வோம் என்று இந்த ஆளும் தரப்பினர் பெரிதாக பிரஸ்தாபித்னர். ஆனால் இவற்றை தாண்டி, மோசடி மிக்க ஹேக்கர் ஒருவர் நமது நாட்டின் 25 இலட்சம் டொலர்களை கையகப்படுத்திவிட்டான் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நடமாடும் நூலகங்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்து அரச சொத்துக்கள் மற்றும் வளங்களை பொதுவான சொத்துக்களாக பாதுகாப்போம் என்று பொது மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். இவ்வாறு கூறி ஆட்சிக்கு வந்த இவர்களால் இறுதியில் நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது.

இயலாமை மிக்க அரசாங்கமே இன்று ஆட்சியிருக்கிறது. இந்த 25 இலட்சம் டொலர் இழப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை அரசாங்கம் நாட்டிற்கு முன்வைக்க வேண்டும்.

இழந்த தொகைக்கான இழப்பீட்டை நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தா எடுக்கப்போகிறீர்கள் என்று நாம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம். இவற்றுக்கு அரசாங்கம் உடனடியாக பதில் அளிக்க வேண்டும். இப்போதாவது நாட்டின் சைபர் பாதுகாப்பு மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து அக்கறை கொண்டு புதிய முறைமைகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular