Homeஉள்நாடுசமஷ்டிக் கொள்கையை ஒருபோதும் கைவிடோம்

சமஷ்டிக் கொள்கையை ஒருபோதும் கைவிடோம்

” இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் பண்புமிக்க ஒரு கட்சி. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை” என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அங்கு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஜனநாயகப் பண்புமிக்க கட்சி

“தமிழரசுக் கட்சி என்பது அடக்குமுறைகளைக் கொண்ட கட்சியல்ல. தந்தை செல்வாவின் காலத்தில் எவ்வித அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்படவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கை ரீதியான கட்சியாகவே இது திகழ்ந்தது. தனிமனிதச் சிந்தனைகளை விட, தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய பொதுச் சிந்தனையே எமது கொள்கையாகும்.

சமஷ்டிக் கொள்கையை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை. இனிமேலும் கைவிடமாட்டோம். எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இதுவே அடிப்படைப் பண்பாகக் காணப்பட வேண்டும். இதனைத் தனிப்பட்ட ரீதியில் எவரும் மாற்றவோ அல்லது வேண்டாம் என்று சொல்லவோ முடியாது.

பேரினவாத சக்திகள் ஒற்றையாட்சிச் சிந்தனையிலும், மறுபுறம் அதிதீவிரச் சிந்தனை கொண்டவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையிலும் இருந்தனர். இவ்விரண்டுக்கும் இடையில் எட்டப்படக்கூடிய ஒரே நடுநிலைத் தீர்வு ‘கூட்டாட்சி’ முறையாகும். இது தந்தை செல்வாவினால் வகுக்கப்பட்ட தீர்மானமாகும். ஒற்றையாட்சிக்குள் எங்களைக் கொண்டுவர நினைக்கும் பேரினவாத சக்திகளின் திட்டங்களுக்கு நாங்கள் ஒருபோதும் தலையாட்ட முடியாது.

ஒற்றுமை என்பது பேசுவதற்கு இனிமையாக இருக்கலாம். ஆனால், வெளியில் ஒற்றுமையைப் பேசிக்கொண்டு உள்ளுக்குள் பகையை வளர்த்தால் அது ஒருபோதும் சாத்தியப்படாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் உண்மையான நோக்கத்தில் ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ. சிறிநாத், மூத்த உறுப்பினர் அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், பேராசிரியர் ந.புஸ்பராசா, வாலிப முன்னணியின் மாவட்டத் தலைவர் க. சோபனன், மகளிர் அணியின் உப தலைவி த. கௌரி, முன்னாள் மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular