Homeஉள்நாடு“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு!

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு!

சமூகத்தை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார நன்மைகள் சமூகத்தில் சமமாகப் பகிரப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது “சமூக சக்தி” வேலைத்திட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான தற்போதைய முன்னேற்றம், அதனுடன் தொடர்புடைய திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டதோடு இது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக, “சமூக சக்தி” வழிநடத்தல் குழுவின் விசேட கலந்துரையாடலை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, பன்முக அணுகுமுறையைக் கொண்ட சமூக வலுவூட்டல் திட்டமாக “சமூக சக்தி” முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படும் 03 தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்களில் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்வதும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அபிவிருத்தியின் ஊடாக கிராமப்புறங்களை முழுமையான வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதும் இந்தத் திட்டத்தின் பிரதானநோக்கமாகும்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.எம்.யு.பி. ஹேரத், கிராமிய அபிவிருத்திப் பணியகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular