Homeஉள்நாடுவட்டுக்கோட்டையில் இரு குழுக்கள் வன்முறை: மூவர் கைது!

வட்டுக்கோட்டையில் இரு குழுக்கள் வன்முறை: மூவர் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வன்முறையைக் கட்டுப்படுத்தினர். அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மூளாய் பகுதியில் பாதுகாப்புக்கு நிலை நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டது.மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.

மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏற்பட்ட தர்க்கம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று , தீர்த்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு நபர்களின் பிரச்சினை மீண்டும் தலைதூக்கிய நிலையில் , அது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் பிரச்சினையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.

அதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அந்தப் பகுதியில் குழுமியிருந்தவர்களைத் துரத்தினர்.
அத்துடன் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர். பலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular