HomeTop newsபரீட்சை பெறுபேறுகள் மட்டுமே கல்வியல்ல - பிரதமர் ஹரிணி

பரீட்சை பெறுபேறுகள் மட்டுமே கல்வியல்ல – பிரதமர் ஹரிணி

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல என்றும், தலைமைத்துவம், குழு உணர்வு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களைப் பிள்ளைகளிடம் வளர்க்கும் மிக முக்கியமான இடமாகப் பாடசாலை திகழ வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கோட்டை ஆனந்த சாஸ்திராலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் நேற்று (30) கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, கடந்த 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்குரிய பாடத்துறை மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வகுப்பு ரீதியான திறமைச் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு மாத்திரமன்றி, விளையாட்டு, கலை மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களின் ஆற்றல்களையும் அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, உயர்தர வகுப்புகளில் ஆண் மாணவர்கள் பாடசாலைக் கல்வி முறைமையிலிருந்து படிப்படியாக விலகிச் செல்வது தொடர்பில் குறிப்பிட்ட பிரதமர், இந்நிலைக்குக் காரணமாக அமையும் விடயங்கள் குறித்து ஆழமாக ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிள்ளைகளுக்குத் தேவையான அன்பு, பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்வதற்குத் தேவையான திறன்கள் ஆகியவற்றைப் பாடசாலையின் ஊடாக வழங்க வேண்டும் என்றும், அதற்காகப் பிள்ளைகளைப் பாடசாலையில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளக்கூடிய கவர்ச்சிகரமானதும் ஆதரவளிக்கக்கூடியதுமான கற்றல் சூழலை உருவாக்குவது பாடசாலைக் கட்டமைப்பின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இன்றைய உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்வாய்ப்புத் துறைகள் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றன. எனவே, வாழ்க்கை என்பது புத்தக அறிவிற்கோ அல்லது டிஜிட்டல் சாதனங்களுக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்த பிரதமர், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதற்கும் சமூகத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்குமான ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் உலகை வெற்றிகொள்வது கடினமாகிவிடும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், களனிப் பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் கே. கமல் திலகரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுர நகர முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular