HomeTop newsசவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை - அவசர இராஜதந்திர தலையீடு கோரும் அலி சப்ரி

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை – அவசர இராஜதந்திர தலையீடு கோரும் அலி சப்ரி

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனது ‘X’ சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், அனோஜன் சிவராசாவுக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பின்னர் மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கவலையும் வருத்தமும் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் சட்ட அமைப்பை மதிக்கும் அதேவேளை, குறித்த சம்பவத்தில் இவ்வாறான கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து மௌனமாக இருக்க முடியாது என அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்தொன்றுக்காக ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், குறித்த கருத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அனோஜன் அதனை நீக்கியதுடன், பகிரங்க காணொளி மூலம் மன்னிப்பும் கோரியதாகத் தெரியவருவதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஒரு தவறுக்காக ஒருவர் மனம் திருந்தி, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, அனோஜன் சிவராசாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கருணையுடன் கோரிக்கை விடுத்துள்ள அலி சப்ரி, இலங்கை அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு அவருக்கு முறையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், உயர்மட்ட இராஜதந்திர மட்டத்தில் சவுதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இளைஞரை மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular