இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உறுதியாக இலங்கையுடன் துணை நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், நேற்று (08) கொழும்பில் இடம்பெற்ற இந்திய சமூகத்தினருடனான சந்திப்பில் உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் நெருக்கமான கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையுடன் துணை நிற்கும்” என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தனது உரையின்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட அவர், உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா தற்போது 16 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டில் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், தற்போது சுமார் 4 டிரில்லியன் டொலராக விரிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியும் கடந்த 12 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சுமார் ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி தற்போது வரலாறு காணாத அளவாக சுமார் ரூ.39,000 கோடியாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 2013-14ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.2 இலட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் ரூ.7.25 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சியானது இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள் அதிகரித்து வருவதையும், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கி நாடு முன்னேறி வருவதையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மின்னணு சாதனங்கள் மற்றும் அலைபேசி உற்பத்தி, ஏற்றுமதி, உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பொதுச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களையும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் நற்பெயரையும் நிலையையும் வலுப்படுத்துவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவுக்கும் அவர்கள் வாழும் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முக்கியப் பாலமாக தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ், மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுஃப், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட அரச அதிகாரிகள், இந்தியாவின் மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
