HomeTop newsதமிழகத்தில் H1N1 பன்றிக் காய்ச்சல் பரவல்

தமிழகத்தில் H1N1 பன்றிக் காய்ச்சல் பரவல்

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாகவே எச்1என்1 வகை பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்படக்கூடும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மருத்துவ ஆலோசனையின்றி மருந்தகங்களில் தாமாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் சுய மருத்துவத்தை முற்றாகத் தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள அரசு அல்லது தனியார் சுகாதார நிலையத்தை அணுகி, உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் சுகாதாரத்தைப் பேணுதல் உள்ளிட்ட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமே பன்றிக் காய்ச்சல் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular