SLS தரச்சான்று முத்திரை இல்லாத மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
2015 ஜூலை 16ஆம் திகதியிடப்பட்ட 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 59ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களும் SLS 517 தரநிலைக்கான SLS தரச்சான்று முத்திரையை கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த 27ஆம் திகதி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 98 விசேட சோதனை நடவடிக்கைகளில், SLS முத்திரை இல்லாத 431-க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், SLS அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத நிலையில் தலைக்கவசங்களை உற்பத்தி செய்த இரண்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட 3,520 தலைக்கவசங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2026ஆம் ஆண்டில் இதுவரை 151 சோதனை மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 4,038-க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் தொடர்பாக கைப்பற்றுதல் மற்றும் விற்பனையைத் தடை செய்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
