இந்தியாவில் டெங்கு தடுப்பில் முக்கிய மைல்கல்லாக, டகேடா பயோபார்மசூட்டிகல்ஸ் இந்தியா உருவாக்கிய ‘க்யூடெங்கா’ (QDENGA) தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) சந்தை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற முதல் டெங்கு தடுப்பூசியாக க்யூடெங்கா உருவெடுத்துள்ளது.
இந்தத் தடுப்பூசி 4 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தத் தடுப்பூசியைப் பெறலாம். மேலும், தடுப்பூசி செலுத்துவதற்கு முன் டெங்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதும் இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இந்த ஒப்புதல் முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளதாக டகேடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டகேடாவின் கண்டங்களுக்கு இடையேயான சந்தைகளின் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், “2022ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து க்யூடெங்கா 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த ஒப்புதல், டெங்கு தடுப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்” என்றார்.
நிறுவனத்தின் தகவலின்படி, ஏழு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட ஆய்வுத் தரவுகள், டெங்கு வைரஸின் நான்கு வகை செரோடைப்களாலும் ஏற்படும் தொற்று மற்றும் மருத்துவமனை அனுமதி அபாயத்திலிருந்து இந்தத் தடுப்பூசி நீடித்த பாதுகாப்பை வழங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளன.
இந்திய ஒப்புதலுக்கு ஆதாரமாக, உலகளாவிய மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட பல கட்ட மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் நடைபெற்ற DEN-302 மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறனை உறுதிப்படுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
க்யூடெங்கா தடுப்பூசி, மூன்று மாத இடைவெளியில் தோலுக்குக் கீழ் செலுத்தப்படும் 0.5 மில்லி அளவிலான இரண்டு டோஸ்களாக வழங்கப்படுகிறது.
உலகிலேயே அதிக டெங்கு பாதிப்புகள் பதிவாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், நாட்டின் பல பகுதிகளில் டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் ஒரே நேரத்தில் பரவி வருவதாகவும் டகேடா குறிப்பிட்டுள்ளது.
டகேடாவின் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பிராந்திய மருத்துவ விவகாரத் தலைவர் கோ சூ பெங் கூறுகையில், “முன்னர் டெங்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், நான்கு வகை டெங்கு வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பு வழங்கும் வகையில் க்யூடெங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. நோய்க்கடத்தி கட்டுப்பாடு, கண்காணிப்பு, சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகளுடன் இணைந்து, இந்தியாவின் டெங்கு தடுப்பு முயற்சிகளை இது மேலும் வலுப்படுத்தும்” என்றார்.
டெங்கு பரவலாக உள்ள பகுதிகளில் க்யூடெங்காவைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ளதாகவும், தடுப்பூசிக்கு முன் பரிசோதனை தேவையில்லாததால் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளின் பொது நோய்த்தடுப்புத் திட்டங்களில் இதைச் சேர்க்க ஆதரவு அளித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், க்யூடெங்கா உலக சுகாதார அமைப்பின் முன்தகுதிச் சான்றிதழையும் பெற்றுள்ளதால், யுனிசெஃப் மற்றும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) போன்ற சர்வதேச அமைப்புகள் இந்தத் தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் தகுதி பெற்றுள்ளது.
125-க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியுள்ள டெங்கு நோயின் உலகளாவிய பாதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருப்பதாக டகேடா தெரிவித்துள்ளது. வேகமான நகரமயமாக்கல், காலநிலை மாற்றம் மற்றும் கொசு இனப்பெருக்கம் அதிகரித்தல் ஆகியவை நாட்டில் டெங்கு பரவல் அபாயத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
