நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) இடம்பெற்ற அமைதியின்மையின்போது பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார விளக்கமளித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
சிறைச்சாலை வளாகத்தில் பிரதானமாக இரும்புக் கதவு மற்றும் மரக் கதவு என இரண்டு பாதுகாப்பு கதவுகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். மோதலில் ஈடுபட்ட கைதிகள் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு மரக் கதவை நோக்கி முன்னேறியதாகவும், அந்த இரு கதவுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெறுமதிமிக்க உபகரணங்கள் மற்றும் முக்கிய பாதுகாப்பு வசதிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கைதிகள் மரக் கதவையும் உடைத்து வெளியேறியிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய சேதத்தின் அளவை கணிக்க முடியாது என்றும், அந்த ஆபத்தான சூழ்நிலையைத் தடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் தங்களது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்தவும், தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகளை மீட்கவும் சென்ற சிறைச்சாலை அதிகாரிகளில் பலர் கைதிகளுக்குள் சிக்கி தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், கைதிகள் இரும்புக் கதவை உடைத்து மரக் கதவு வரை முன்னேறியதால், நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் மரக் கதவு வழியாக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார விளக்கமளித்தார்.
