HomeTop newsடெங்கு பாதிப்பு தீவிரம்: கொழும்பில் 12,000-ஐ கடந்த நோயாளர்கள்

டெங்கு பாதிப்பு தீவிரம்: கொழும்பில் 12,000-ஐ கடந்த நோயாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 12,017 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது ஒட்டுமொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் சதவீத அடிப்படையில் 20.43% ஆகும்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் ஒட்டுமொத்தமாக 58,810 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 2,604 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மாத்திரம் 3,422 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த 7 மாத காலப்பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,547 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், பெப்ரவரி மாதத்தில் 5,721 பேரும், மார்ச் மாதத்தில் 6,013 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,651 பேரும், மே மாதத்தில் 8,590 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாகாண மட்டத்தில் பார்க்கும்போது, ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் 52.50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 30,876 ஆகும்.

அதேநேரம், தென் மாகாணத்தில் 9,316 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,129 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 4,542 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களே மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 12,017 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,740 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 4,262 பேரும், களுத்துறையில் 3,955 பேரும், கண்டியில் 3,575 பேரும், இரத்தினபுரியில் 3,530 பேரும், காலியில் 3,364 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 35 ஆகும்.

தற்போது நாட்டில் டெங்கு பரவும் அதிக அவதானம் மிக்க 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நிலவும் இந்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சூழலை சுத்தமாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular