Homeஉள்நாடு‘வெலே சூதா’வின் மேல்முறையீடு தள்ளுபடி

‘வெலே சூதா’வின் மேல்முறையீடு தள்ளுபடி

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கம்போல விதானகே சமந்த குமார, எனப்படும் வெலே சுதா தாக்கல் செய்திருந்த சிறப்பு மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

இதன் மூலம், கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்கு விதித்திருந்த மரண தண்டனை மற்றும் குற்றத்தீர்ப்பு மாற்றமின்றி தொடரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேகர மற்றும் சோபித ராஜகருண ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கொழும்பு உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் சட்டவிரோதமானவை எனக் கூறி, அவற்றை ரத்து செய்யுமாறு கோரி வெலே சூடா இந்த சிறப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எனினும், வழக்கை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்ததுடன், முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் தண்டனையும் அப்படியே அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு மவுண்ட் லவினியா பகுதியில் 7.05 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததுடன், அதனை கடத்திய குற்றச்சாட்டில் வெலே சூடா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம், 2015 அக்டோபர் 14 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை விதித்தது. அத்தீர்ப்பை அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன வழங்கியிருந்தார்.

பின்னர், 2019 ஏப்ரல் 5 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றமும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி, மரண தண்டனையை நிலைநிறுத்தியது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்யரத்ன ஆஜரானார்.

அதேவேளை, சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான லக்மாலி கருணநாயக்க முன்னிலையாகி அரசுத் தரப்பின் வாதங்களை முன்வைத்தார்.

இறுதியில், மனுவில் முன்வைக்கப்பட்ட காரணங்கள் போதுமானதாக இல்லை எனக் கருதிய உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, வெலே சூடாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular