அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், 21 வயதுடைய நசீர் பெஸ்ட் என பாதுகாப்புத் தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, குறித்த நபர் இதற்கு முன்னரும் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நேரப்படி நேற்று (23) மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகை அருகே வந்த சந்தேக நபர், பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார்.
விசாரணைகளின் போது, நசீர் பெஸ்ட் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் மனநல சிகிச்சைக்காக மருத்துவ மையத்துக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
