இலங்கை கிரிக்கெட்டின் மேம்பட்ட திறமை மையத்தின் ஆலோசகராகப் பணியாற்றி வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய, இந்த மாத இறுதியுடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் உருமாற்றக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், மேம்பட்ட திறமை மையத்தின் ஆலோசகர் பதவியும், மாத்தறை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியும் ஒன்றாக வகிப்பது “நலன் முரண்பாடு” என சில தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டதாக ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை கிரிக்கெட்டுக்காகவே பொறுப்பேற்றேன்”
இந்தப் பொறுப்புகளை எந்தவொரு தனிப்பட்ட நலனுக்காக அல்லாமல், கடினமான சூழ்நிலையில் இருந்த இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆதரவளிக்கவே ஏற்றுக்கொண்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
தலைமைப் பயிற்சியாளர் காலத்தை நினைவுகூர்ந்த ஜெயசூரிய
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், அணி கடுமையான சரிவில் இருந்த நேரத்தில் சவாலை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுடன் இணைந்து அணியின் நம்பிக்கையையும் போட்டித்திறனையும் மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாகவும், அதன் பலனாக இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக முக்கிய வெற்றிகளைப் பெற முடிந்ததாகவும் கூறினார்.
டி20 உலகக்கோப்பை தோல்வி குறித்து விளக்கம்
ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறத் தவறியதைப் பற்றி கருத்து தெரிவித்த ஜெயசூரிய, வீரர்களின் காயங்கள், அணி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சில காரணிகள் திட்டங்களை பாதித்ததாக தெரிவித்தார்.
இருப்பினும், தலைமைப் பயிற்சியாளராக அந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னரே அந்தப் பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் கூறினார்.
“மாத்தறை கிரிக்கெட் என் மனதிற்கு நெருக்கமானது”
மாத்தறை மாவட்ட கிரிக்கெட் சங்கம் தொடர்பான விமர்சனங்கள் குறித்து பேசுகையில், கிராமப்புறத்தைச் சேர்ந்த வீரராக மாத்தறை கிரிக்கெட்டின் வளர்ச்சி தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானது என ஜெயசூரிய தெரிவித்தார்.
புதிய நிர்வாகம் தனது இரண்டு பதவிகளையும் முரண்பாடாகக் கருதினால், மற்றொரு பதவியை விட மாத்தறை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதே தன் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து ஆதரவு”
இறுதியாக, புதிய நிர்வாகக் குழு இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் அதன் பொற்காலத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய ஜெயசூரிய, எந்த உத்தியோகபூர்வ பதவியும் இல்லாமல் இலங்கை கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து முழு ஆதரவை வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.
