ஈரான் மோதல் மற்றும் மேற்கு ஆசிய பதற்றங்களால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்கள் சனிக்கிழமையன்று லிட்டருக்கு ரூ.1 இற்கும் குறைவாக விலையை உயர்த்தியுள்ளன. இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் மூன்றாவது விலை உயர்வு இதுவாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புது தில்லியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.87 அதிகரித்து ரூ.99.51 ஆகவும், டீசல் விலை ரூ.0.91 உயர்ந்து ரூ.92.49 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு சுமார் 90 பைசா உயர்த்தப்பட்டிருந்தன. அதற்கு முன்பு, மேற்கு ஆசிய மோதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள விநியோக அச்சங்கள் காரணமாக, லிட்டருக்கு ரூ.3 வரை விலை உயர்த்தப்பட்டிருந்தது.
மார்ச் 2024-ல் ஒருமுறை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டதைத் தவிர, 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியாவில் சில்லறை எரிபொருள் விலைகள் பெரும்பாலும் நிலையாகவே இருந்து வந்தன.
ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட அதிர்வுகளால் நுகர்வோர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தினசரி விலை மாற்றங்களை 2022-ல் நிறுத்தியிருந்தன.
ஆனால் தற்போது மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது. பெப்ரவரி மாதத்தில் ஒரு பேரல் இந்திய கச்சா எண்ணெய் சராசரியாக 69 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது அது 113 முதல் 114 டாலர் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தை மாற்றங்கள் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
