யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 மணி நேரம் நீடித்த கடும் போராட்டத்திற்குப் பின்னரே தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதிகாலை வேளையில் திடீரென மருந்து களஞ்சியப் பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் யாழ் மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராணுவம், விமானப்படை, பொலிஸார் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்து தீயணைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
களஞ்சியசாலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய அமிலப் பொருட்கள் மற்றும் மருந்துகள் சேமிக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், களஞ்சியசாலை கட்டடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில், சேதமடைந்த பகுதிகளை அகற்றும் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அண்மையில் அமைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஏற்பட்டிருக்கக்கூடிய மின் கசிவே இந்த தீ விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
