நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (09) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாடிக்கு 8,400 கன அடி நீர் தெதுறு ஓயாவிற்கு வெளியேற்றப்படுகின்றது.
அதேவேளை, லுணுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2 கதவுகள் தலா 4 அடி உயரத்திலும், ஏனைய 4 கதவுகள் தலா 8 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விநாடிக்கு 2,915 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கிரிந்தி ஓயாவை பயன்படுத்தும் மக்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிவாசிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேநேரம், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 கதவுகள் தலா 2 அடி உயரத்திலும், மீதமுள்ள 2 கதவுகள் தலா 3 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விநாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மழை நிலை தொடரும் வாய்ப்பு காணப்படுவதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
