Homeஉள்நாடுநுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. தியசிறிகம, அயரபி, ஹொன்சி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், இப்பகுதிகளின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

பல இடங்களில் வீடுகளின் கூரைகள் மீது மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவங்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனினும், வீடுகளின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாலை வேளையில் கனமழை பெய்துவருவதுடன், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

இதனால் பார்வைத் திறன் குறைவாக இருப்பதால், வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, வேகத்தைக் குறைத்து வாகனங்களைச் செலுத்துவதன் மூலம் விபத்துக்களைத் தவிர்க்கலாம் எனப் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
மழையுடன் கடும் இடி, மின்னல் தாக்கம் காணப்படுவதால், பொதுமக்கள் மின் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மலைவாஞ்சான்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular