Homeஉள்நாடுடித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தோட்டப்பகுதி மக்களுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் ‘பொருத்தமற்றவை’

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தோட்டப்பகுதி மக்களுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் ‘பொருத்தமற்றவை’

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்று பிரதமரிடம் வலுவாக வலியுறுத்தியுள்ளது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தின் போது, மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே வீடொன்றை நிர்மாணிப்பதற்குத் தகுந்த காணியைக் கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், பிரதான நகரப் பகுதிகளில் பொது வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹாவத்த தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மலையக சமூகம் வசிக்கும் பகுதிகளுக்கு அடுக்குமாடிக் கட்டிடங்கள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.

பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான 15 முன்மொழிவுகளுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையின் நகலை பிரதமருக்கு கையளித்த மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு, இந்த விடயங்கள் குறித்து விவாதிக்க உடனடியாக திகதியை வழங்குமாறும் பிரதமரைக் கோரியிருந்தது.

மார்ச் 28 அன்று பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்பு மற்றும் மாற்றுத் திட்டங்கள் தொடர்பான பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கூறுகிறது.

மக்களின் வீடு மற்றும் காணி உரிமைகள், இடைக்கால தங்குமிட முகாம்களின் அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், பெண் சிறுவர் பாதுகாப்பு, உட்கட்டமைப்புகள், நிவாரண முறைகேடுகள் மற்றும் பாகுபாடுகள் குறித்து மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு, பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுத்துரைத்தது.

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு 50 இலட்ச ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் காணி வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் குறித்து தான் விசேட கவனம் செலுத்துவதாகவும், மலையக மக்களுக்கான நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக அமைச்சரவை பத்திரமொன்றை கூடிய விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்ததாகவும், இதில் விசேடமாக, ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கும் 50 இலட்ச ரூபாய்ப்பு குறையாமல் வீடு மற்றும் காணி வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்ததாகவும், மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஏற்பட்ட ’டித்வா’ சூறாவளியினால் விளைந்த சேதங்களைச் சீர்செய்து, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுக்களினதும் உபகுழுக்களினதும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 20,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கவும், பகுதியளவில் சேதமடைந்த 1,15,000 வீடுகளைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சகத்தின் செயலாளர் பொறியாளர் எல். குமுதுலால் போகஹாவட்டே தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கும்போது, மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நகர்ப்புற பொது வசதிகளைக் கொண்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதன் அவசியத்தையும், மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படாத பாதுகாப்பான இடங்களைத் தெரிவு செய்வதன் தேவையையும், பொதுமக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மலையகத்திற்குப் பொருத்தமில்லாத எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது என்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் முழுமையாக நிலைநாட்டப்படும் வரை தங்களது தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் பணிகளை முன்னெடுப்பதிலும் உறுதியாகவுள்ளதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு மேலும் தெரிவிக்கின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular