Homeஉள்நாடுஉலகச் சந்தையைக் காரணம் காட்டி மக்களை முட்டாளாக்க வேண்டாம்!

உலகச் சந்தையைக் காரணம் காட்டி மக்களை முட்டாளாக்க வேண்டாம்!

அரசிடம் 7 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து நாட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, கொவிட் காலத்தில் எரிபொருள் வரிகளைக் குறைக்கக் கோரினார். ஆனால் இன்று 92 வகை பெற்றோலுக்கு 117 ரூபாயும், டீசலுக்கு 100 ரூபாயும் வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இந்த வரியையாவது நீக்கி மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கவில்லை.” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது என்று சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தானில் 26 சதவீதமும் வியட்நாமில் 19 சதவீதமுமே விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தரவுகளை முன்வைத்தார். உலகச் சந்தையைக் காரணம் காட்டி மக்களைத் தொடர்ந்து முட்டாளாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“சிங்கள – தமிழ் புத்தாண்டு நெருங்கும் வேளையில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் கடும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு நிலவியபோதும், மருந்தும் உணவும் தடையின்றி வழங்கப்பட்டன. ஆனால், இன்று போதிய கையிருப்பு இருப்பதாகக் கூறும் அரசாங்கம், மக்களை ஒருவேளை உணவிற்கே வழியில்லாத நிலைக்குத் தள்ளியுள்ளது” என்றும் அவர் சாடினார்.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவே விலை உயர்த்தப்பட்டதாக அரசு கூறுவது வேடிக்கையானது என்று தெரிவித்த அவர், பொய்களைக் கூறுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு உண்மையான நிவாரணத்தை வழங்குமாறு அரசை வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular