Homeஉள்நாடுஎதிரணி அரசியல்வாதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து!

எதிரணி அரசியல்வாதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து!

” பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு மூலம் ஜகத் விதானவின் குடிமகன் என்ற முறையிலான சிறப்புரிமைகளும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலான அவரது சிறப்புரிமைகளும் மீறப்பட்டுள்ளன.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சில நடவடிக்கைகள் பெரிதும் அரசியல்மயமாகி காணப்படுகின்றன. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ் மா அதிபர் மாறிவிட்டார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் தெட்டத் தெளிவாக தெரிகிறது என்று விசேட அறிவிப்பின் ஊடாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

” அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாட்டாளராக செயற்படும் போது அவரை குற்றவாளியாக அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பாதுகாப்பு வழங்குவது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதா அல்லது பாதுகாப்பை வழங்கும் பெரும் பொறுப்பை அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் எடுத்துள்ளனரா என்று கேள்வி எழுப்புகிறோம்.

ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்கிறோம். அரசாங்கம், பொலிஸ் மா அதிபர், சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட சகலரும் ஜகத் விதானாவின் பாதுகாப்பை உறுதி செய்து, அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

220 இலட்சம் குடிமக்களுக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  , தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினது பாதுகாப்பு தொடர்பில் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தி, சகல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular