Homeஉலகம்தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடன் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நடத்திய தொலைபேசி உரையாடல் கசிந்ததை அடுத்து, அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

அண்டை நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை தகராறு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்நிலையில், பதட்டத்தை தணிக்கும் நோக்கில், கம்போடிய முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, ஹன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், தங்கள் நாட்டு ராணுவத் தளபதி குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கசிந்ததை அடுத்து, தாய்லாந்து பிரதமருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நெறிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியது. மேலும், இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட இருப்பதால், பிரதமரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்தும் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இடை நீக்கத்தைத் தொடர்ந்து அரசியலமைப்பு நீதிமன்றம் தற்போது பேடோங்டார்ன் ஷினவத்ராவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகளான பேடோங்டார்ன் ஷினவத்ரா, கடந்த ஆண்டுதான் பிரதமரானார். தற்போது 39 வயதாகும் அவர், ஒராண்டு காலத்தில் தனது பதவியை இழந்துள்ளார். தாய்லாந்தின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அரசியல் எதிர்காலம் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

முன்னதாக, கம்போடிய தலைவருடன் தான் பேசிய தொலைபேசி பேச்சுக்கு பேடோங்டார்ன் ஷினவத்ரா மன்னிப்பு கோரி இருந்தார். போரை தவிர்க்கும் முயற்சியாகவே தொலைபேசியில் பேசியதாகவும் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular