Homeஉள்நாடுதோட்டப் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது குறித்து ஆராய்வு!

தோட்டப் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது குறித்து ஆராய்வு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள 29 நிறுவனங்களினால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், அதன்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

தென்னைப் பயிர்ச்செய்கையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக வர்த்தகப் பயிர்ச்செய்கைகொண்ட காணிகளை இனங்கண்டு அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

புதிதாக தென்னைகளை பயிரிடுவதை விட, ஏற்கனவே உள்ள தென்னந் தோட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, குறை பயன்பாட்டைக்கொண்ட தனியார் தென்னந் தோட்டங்களை சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளைப் பயன்படுத்துவதற்கான திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தோட்ட வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, தோட்டப் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுதல் மற்றும் தோட்டத் துறையில் சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன. ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறைகள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை கறுவா உற்பத்திகளின் தரம் மற்றும் உலகளாவிய அணுகலை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. மேல்மாகாணத்தில் கறுவாச் செய்கையை ஊக்குவிப்பதற்கும் அதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் நிலப் பாவனையையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

தற்போது இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான சந்தை காரணமாக பல தொழில்துறைகள் திறன் குறைவாக உள்ளதால், இது குறித்து உரிய மதிப்பீட்டை மேற்கொண்டு இந்நாட்டின் தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு ஒரு மூலோபாய திட்டத்தை தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் இணைசெயற்பாட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைப்பது மற்றும் கலைக்கப்பட வேண்டிய நிறுவனங்களை கலைப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பெருந்தோட்டத் துறையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது மற்றும் எதிர்பார்க்கும் இலக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு ஆகியோருடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் குழு மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular