உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளை பிடிப்போம் என கத்தோலிக்க மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
பிரதான சூத்திரதாரி தமது கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்ததை அவர் மறைத்தார். அதேபோல பேராயரையும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தவறாக வழிநடத்தினார்கள்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் இது தொடர்பில் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம். பேராயரும் இது விடயத்தில் தலையிட்டு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். ஏனெனில் பிரதான சூத்திரதாரிகள் மறைக்கப்படுகின்றனரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. ” – என்றார்.
