HomeBig Storyசெம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி ஜூன் 26 ஆரம்பம்!

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி ஜூன் 26 ஆரம்பம்!

யாழ். செம்மணி – சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வின்போது நேற்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில இருந்து வெளியே மீட்கப்பட்டுள்ளன.

இந்த 19 எலும்புக்கூடுகளும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும், சட்ட வைத்திய அதிகாரி குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார் எனவும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி – சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்ற நீதிபதி ஆ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் ஆரம்பமாகின. இரண்டு நாள்கள் அகழ்வு பணிகள் நடைபெற்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாகப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

பின்னர் மீண்டும் இந்த மாதம் 2ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை வரையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் 19 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாகப் பிரகடனப்படுத்துமாறும், மேலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் கடந்த வாரம் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க 45 நாள்கள் வழங்கிய மன்று, அந்தப் பகுதியை மனிதப் புதைகுழியாகவும் குற்றப் பகுதியாகவும் பிரகடனப்படுத்தி இருந்தது.

இந்நிலையில் 45 நாள்கள் அகழ்வுப் பணிக்கான பாதீட்டை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவிடம் நேற்று ஒப்படைத்தார்.

இதற்கமைய அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான உத்தேச திகதியாக ஜூன் 26ஆம் திகதியை நீதிவான் அனுமதித்துள்ளார். குறித்த உத்தேச திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப் பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி குறித்த திகதியில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular