Homeஉள்நாடுபொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க பொது மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மிக முக்கியம்

பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க பொது மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மிக முக்கியம்

பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நிதி அமைச்சில் இன்று (04) திறைசேரி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

சீனா, கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் பல காலகட்டங்களில் பொது மக்களுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் பலனாகவே பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்வதில் தனிநபர்கள் என்ற ரீதியில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரம் இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அரசியல் அதிகாரம் என்ற வகையில் அதிகாரிகள் மீது தனது கருத்தை மாத்திரம் திணிக்க மாட்டேன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிபுணத்துவ அறிவு கொண்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு இடையே இடம்பெறும் முறையான கலந்துரையாடல்கள் மூலம் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சில தன்னிச்சையான அரசியல் தலையீடுகளால் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தோல்வியடைந்த விதம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அரசாங்கத்தின் கீழ் பேணுவதுடன், அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் குறித்த நிறுவனங்களில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இங்கு திறைசேரி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம், அத்துடன் அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள், 2027 ஆம் ஆண்டுக்கான GSP+ சலுகை குறித்தும் ஜனாதிபதி நிதி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular