முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறுகின்றது. 16 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் பிரதேசம் இந்தக் காலப் பகுதியில் இரத்தத்தினால் தோய்ந்திருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இறுதி யுத்தத்தின் போது பேரிழப்புகளை தமிழ் மக்கள் சந்தித்திருந்தனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தனர். தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது பலமுனைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதனால் ஏற்பட்ட இழப்புகள் விபரிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த இறுதி யுத்தத்தின் போது 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். 9 ஆயிரம் சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்று காணாமல்போனோரது சோக வரலாறுகள் இன்றும் தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இழப்புகளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடந்தோறும் மே மாதம் 18ஆம் திகதி நடத்தப்பட்டு வருகின்றது. மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் வாரம் நினைவு கூரப்படுகின்றது.
16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இம்முறையும் முள்ளிவாய்க்கால் வாரம் கடந்த 6 தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் மக்கள்பட்ட அவலத்தை வெளிக்காட்டும் வகையில் கடந்த ஒரு வார காலமாக வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டு வந்தது.
முள்ளிவாய்க்காலில் பேரழிவுகளை சந்தித்த தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி போராடி வருகின்றனர். ஆனால், 16 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அதற்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் உறுதி வழங்கிய போதும் உள்ளக விசாரணையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
