Homeஉள்நாடுபயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளோரை விடுவிக்கவும்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளோரை விடுவிக்கவும்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான விவாதம் (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது உரையில்,

” இந்த அரசாங்கம் அதிகமான மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம். சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள், பெரிய எதிர்பார்ப்புகளை மக்களுக்கு வழங்கிவிட்டு வந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் கூறிய விடயங்களை நிறைவேற்றுகிறீர்களா? என்று மக்கள் உங்களை உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கடந்த காலங்களில் பிமல் ரத்நாயக்க போன்றவர்கள், இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். நட்புறவு சங்கத்தின் தலைவராகவும் பிமல் ரத்நாயக்கதான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

இருந்தபோதிலும், அண்மையில், ருஷ்தி என்ற நபரை கைது செய்தமை ஒரு பெரிய பேசுபொருளாக மாறியது. இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஸ்டிக்கரை ஒட்டினார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்டது தவறல்ல, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதவானுடைய உத்தரவின் பேரில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால், அந்த விடயம் தவறாகப் பேசப்பட்டிருக்கமாட்டாது. ஆனால், பயங்கரவாத தடை சட்டத்துக்கு (PTA) கீழ் அவரைக் கைது செய்தமையை, பொலிஸாரின் ஒரு கேவலமான செயலாகவே நான் பார்க்கிறேன். இது இந்த அரசாங்கத்துக்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை, எதிர்காலத்தில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பொலிஸாரும் யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இதனை செய்தார்களோ தெரியவில்லை. எனவே, அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.

கடந்த காலங்களில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் PTA வுக்கு எதிராக அதிகமாக பேசிய ஒருவர். இந்த PTA சட்டத்தினூடாக அநியாயமாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இலங்கை வரலாற்றில், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் PTA வுக்கு கீழ் கைது செய்யப்பட்டார் என்றால், அது நானாக மாத்திரம்தான் இருப்பேன். இன்று நான் நிரபராதி. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு எனக்கு சம்பந்தம் இல்லை என்று நீதிமன்றத்தால் சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன்.

அதேபோன்று, ஆசாத் சாலி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜெஸீம், ராசிக் உள்ளிட்ட இன்னும் பல சகோதரர்களை, PTA வினூடாக அநியாயமாக கைது செய்தனர். ஈஸ்டர் தாக்குதலை யாரோ செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக அநியாயமாக PTA சட்டத்தை பயன்படுத்தினர்.

இன்றும் கூட, இதற்கு முன்னர் PTAவுக்கு கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், கல்விமான்கள் ஆகியோர் 4, 5 வருடகாலமாக சிறையில் வாடுகின்றனர். அவர்களது பிள்ளைகள் இன்று பிச்சை எடுக்கின்றனர். நேற்று ஒரு தாய் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, “நான் பிச்சை எடுத்து என் பிள்ளைகளை வளர்க்கின்றேன்” என்று கூறினார்.

எனவே, இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஈஸ்டர் குண்டு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆகையால், தயவுசெய்து நீதி அமைச்சர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, அநியாயமாக சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றவர்களை, அவசரமாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். என்று குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular