நேபாளத்தில் மன்னராட்சி கொண்டு வர வலியுறுத்தி நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். பொது சொத்துகளை சேதப்படுத்திய 100க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தில் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஷர்மா ஒலி என்பவர் பிரதமராக உள்ளார்.
இங்கு, மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008ல் நடந்த போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி அமுலுக்கு வந்தது.
இருப்பினும், 17 ஆண்டு களில் ஒரு பிரதமர் கூட ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை.
தற்போதைய பிரதமர் ஷர்மா ஒலியின் ஆட்சியிலும் திருப்தியடையாத மக்கள் அங்கு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 19ம் திகதி முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, மன்னராட்சி அமுல்படுத்த வலியுறுத்தி வீடியோ வெளியிட்டதை அடுத்து, அங்கு அதற்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
மன்னராட்சியை அமுல்படுத்த வலியுறுத்தி, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஞானேந்திர ஷா ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகரின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன.
அரசியல் கட்சி அலுவலகங்கள், கடைகள் சூறையாடப்பட்டன. முக்கிய கட்டடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
தலைநகர் முழுதும் கட்டுக்கடங்காமல் அரங்கேறிய வன்முறை சம்பவங்களில், 14 கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரங்களை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நிலைமை சீரடைந்ததை அடுத்து உத்தரவு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது.
கலவரத்தின் போது, பொது சொத்துகளை சேதப்படுத்திய 105 பேரை பொலிஸார் நேற்று கைது செய்தனர். வன்முறைக்கு முக்கிய காரணமானவராக கூறப்படும் துர்கா பிரசாய் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
