” சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு வழங்கிவிட்டு மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.” என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வருமானம் அதிகரிக்கப்படாமல் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். மூன்றுவேளை உணவு உண்பது சிரமமாகிப்போயுள்ள வேளையில், மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் இந்த அரசாங்கம் சிறந்து விளங்குகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (26) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே சஜித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது அரசாங்கமும் ஆளுந்தரப்பு பிரதிநிதிகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
மின்சக்தி அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இவ்வாறானதொரு நாடே காணப்படுகின்றது.
நாட்டை ஆள்வதற்கான திட்டமில்லாத அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது. இதன் காரணமாக நாட்டின் திருப்புமுனையை தீர்மானிக்கும் விதமாக இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும்.” எனவும் சஜித் அழைப்பு விடுத்தார்.
